‘ஆஸ்கரை விட பெண்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே எனக்குப் பெரிது’

கோவை: தனது கதையைச் சொல்லும் ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதை விட, மாதவிடாய் குறித்து பெண் கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப் புணர்வு மகிழ்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர் அருணாச்சலம் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த இவர் இந்திய கிராமங்களில் வசிக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு அவதி களை அறிந்து, அவற்றைக் களைய பாடுபட்டவர். மேலும் மாதவிடாய் காலத்தில் பயன்படுத் தும் நாப்கின்களை மலிவு விலை யில் தயாரித்து கிராமப்புற பெண்க ளுக்கு கிடைக்கச் செய்தவர்.
இந்நிலையில் இவரது இந்தச் சேவையை மையமாகக் கொண்டு ஈரானிய இயக்குநர் ரைக்கா ஜெஹ்தாப்சி ‘பீரியட். எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ (Period. End of Sentence) என்ற ஆவணப்படம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதற்கு 91ஆவது ஆஸ்கர் விழாவில் விருது கிடைத்துள்ளது. 
இந்நிலையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அருணாச்சலம், இந்தப் படத்தின் மூலம், பல காலமாக மூடி வைக்கப்பட்ட பெண்களின் பிரச்சினை உலகளவில் பேசும் பொருளாகி இருக்கிறது என்றார்.
“இந்தியாவில் 34 விழுக் காட்டு பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர். ஆறு லட்சம் கிராமங்களில் மூட நம்பிக்கையால் நாப்கின் பயன்படுத்தவில்லை. இந்த விருது ஏற்படுத்தும் விழிப்புணர்வு பெண்களின் சுகாதாரத்தைக் காக்கும்.
“இதன் மூலம் நூறு விழுக்காடு பெண்களும் நாப்கின் பயன்படுத்தினால் விருது கிடைத்ததைவிட எனக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கும்,” என்கிறார் அருணாச்சலம் முருகானந்தம்.
இவரது சமூகச் சேவையை மையமாக வைத்தே இந்தியில் ‘பேட்மேன்’ என்ற திரைப்படம் உருவானது. இதில் அருணாச் சலத்தின் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்திருந்தார்.
விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய இதுபோன்ற படைப்புகள் பல்வேறு மொழிகளில் உலகெங் கும் தயாரிக்கப்பட வேண்டும் என்கிறார் அருணாச்சலம்.