விஜயகாந்த் தட்டிக்கழித்ததால் வருத்தத்தில் ஸ்டாலின்

வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தைத் (தேமுதிக) தனது கூட்டணியில் சேர்க்க விரும்புகிறது. ஆனால் தேமுதிக இவர்களுக்குச் சிவப்பு விளக்கைக் காட்டி வருகிறது. 2014ஆம் ஆண்டில் நிகழ்ந்த கீழ் அவைத் தேர்தலிலும் 2016ஆம் ஆண்டில் நடந்த தமிழகச் சட்டசபை தேர்தலிலும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக விடாப்பிடியாக இருந்தது. தேமுதிக தொடர்ந்து திமுகவை ஓரந்தள்ளிவிட்டுப்போனது. 

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த, இந்தியா திரும்பியதைத் தொடர்ந்து தமிழகக் கட்சித் தலைவர்கள் பலர் அவரது வீட்டுக்குச் சென்று கூட்டணி அமைப்பது குறித்து கலந்துரையாடினர். இதில் திமுக தலைவர் ஸ்டாலினும் ஒருவர். தேமுதிகவுக்கு ஐந்து கீழ் அவைத் தொகுதிகளை வழங்குவதாக ஸ்டாலின் உறுதி கூறியபோதும் அதற்கு விஜயகாந்த, இது குறித்து கட்சியினரிடம் பேசுவதாகச் சொல்லி இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இது குறித்து ஸ்டாலின் வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜயகாந்துடன் அரசியல் பேசவில்லை என்று ஸ்டாலின் ஊடகங்களிடம் கூறியதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தேமுதிகவுடன் பேச்சு தொடர்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தேமுதிக போன்ற கட்சிகளை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.