இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம்

புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு அதிமுகவுக்கே என்று டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி யாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர் தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது.
இதனை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.

இந்த வழக்கில் சசிகலா, டிடிவி தினகரன் தரப்பில் மூத்த வழக் கறிஞர்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி, வழக்கறிஞர்கள் மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் வாதாடினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ். வைத்திய நாதன், கே.வி. விஸ்வநாதன், குரு கிருஷ்ண குமார், வழக்கறிஞர்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன், கௌதம் குமார், பாபு முருகவேல் முன்னிலையாகி தங்களுடைய தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.
இந்த நிலையில் இம்மாதம் 8ஆம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு அதிமுகவுக்கே இரட்டை இலை சின்னம் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. 
இதையடுத்து சசிகலா, தினகரன் ஆகியோர் தனித்தனியாக  தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.