பழனிசாமி: நாட்டை வழிநடத்தும் தகுதி மோடிக்கு மட்டுமே உள்ளது

சென்னை: நரேந்திர மோடி வலிமைமிக்க பிரதமராக இருப்பதாகவும், நாட்டை வழிநடத்தக்கூடிய தகுதி அவருக்கு மட்டுமே இருப்பதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மோடியைப் போன்ற ஒருவரை நாடு முழுவதும் தேடினாலும் பார்க்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த காரணத்தினால் தான் அதிமுக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து பாஜகவை ஆதரிக்கிறோம். பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை துல்லியமாகத் தாக்குதல் நடத்தி கூண்டோடு அழித்துள்ளது. அதற்கு வழிவகுத்தவர் பிரதமர் மோடி. “இந்திய விமானி எதிரிகளிடம் சிக்கிக் கொண்ட போதும் எந்தவிதச் சேதாரமும் இல்லாமல் குறுகிய காலத்தில் மீட்கப்பட்ட வரலாற்றை நிகழ்த்திக் காட்டியவர் பிரதமர் மோடி,” என்று முதல்வர் பழனிசாமி மேலும் தெரிவித்துள்ளார்.