தமிழ்நாட்டைச் சுட்டெரிக்கும் வெயில்; மதுரையில் 23 ஆண்டு காணாத வெயிலின் தாக்கம்

தமிழ்நாட்டில் கடும் வெப்பத்தின் தாக்கத்தால் 10 நகரங்களில் வெயில் 37.7 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

மதுரையில் கடந்த 23 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு 41.1 டிகிரியும் கரூரில் 41, பாளையங்கோட்டை, நாமக்கல், வேலூரில் 40.6, திருத்தேனி, தருமபுரியில் 40, கோவையில் 38.3 என்றும் வெயில் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளைக் கடந்த மூன்று நாட்களாக வெயில் வாட்டிவருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

உச்சக்கட்டமாக நேற்று 10 நகரங்களில் வெயில் 37.7 டிகிரிக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

இன்று மேற்குத் திசைக் காற்றின் வலு குறைய வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் படிப்படியாக வெப்பநிலை குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறியுள்ளார்.