பிரேமலதா: தேமுதிக தனித்துப் போட்டியிடத் தயார்

தேமுதிக எந்த ஒரு கூட்டணியிலும் சேராமல் தனித்துப் போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார். தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கலாசாரத்தை உருவாக்கியதே தேமுதிகதான் என்றார் அவர்.

கூட்டணி அமைப்பது தொடர்பாக தேமுதிகவுக்கும் திமுகவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில் நேற்றுக் காலை செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா மிகவும் ஆவேசத்துடன் பேசினார்.

திமுக என்பது தில்லுமுல்லு கட்சி என்று விமர்சித்த அவர் திமுக தங்களைப் பழிவாங்குவதாகக் குறிப்பிட்டார்.

“கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்திக்க வேண்டும் என்று முதலில் அனுமதி கேட்டது விஜயகாந்துதான். ஆனால், கடைசிவரை ஸ்டாலின் அதற்கு அனுமதி தரவில்லை. ஆனால் நாங்கள் மிகப் பெரிய மனதுடன் ஸ்டாலின் எங்கள் வீட்டிற்கு வரும்போது அவரை தடுக்கவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்தபோது தேமுதிகவை அழைக்காமல் பாமகவுக்கு முதலில் தொகுதி உடன்பாடு செய்ததுதான் இதுவரை தேமுதிக கூட்டணி அமைக்காததற்குக் காரணம் என்றும் பிரமலதா கூறினார்.

திமுகவையும் பாமகவையும் இவ்வாறு விமர்சித்த அவர் அதிமுகவையும் விட்டுவைக்கவில்லை. அதிமுகவின் 27 எம்பிக்களால் தமிழகத்துக்கு ஒரு பலனும் ஏற்படவில்லை என்று அவர் தாக்கிப் பேசினார்.

மிகவும் ஆத்திரத்துடன் பேசிய பிரேமலதா செய்தியாளர்களை ஒருமையிலும் அவன், இவன் என்றும் பேசியதால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ‘மரியாதையுடன் பேசுங்கள்’ என்று கேட்டுக்கொண்ட செய்தியாளர்களுக்குப் பதிலளித்த அவர், “நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்பீர்கள், அதற்கு நான் பொறுமையுடன் பதிலளிக்க வேண்டுமா” என்று உரத்த குரலில் கேட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, தேமுதிகவை தாக்கிப் பேசியதாகக் கூறிய அக்கட்சியைச் சேர்ந்த சிலர் நேற்றுக் காலை வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யச் சென்றனர். தேமுதிக கொடியோடு கறுப்புக்கொடியையும் வைத்திருந்த அவர்களை போலிசார் பாதி வழியிலேயே மடக்கி கைது செய்தனர்.