மோடிக்கு எதிரான அலை வீசுகிறது என்கிறார் திருமாவளவன்

சென்னை: திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட சின்னம் இருப்பதாலும், கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்பதாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக வலியுறுத்தியது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அண்மைய பேட்டி ஒன்றில், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்கள் இல்லாத தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் வெற்றிடத்தை யார் நிரப்புவது? என்பதற்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு சொல்லும் என்றார்.
“கருப்பு பணம் மீட்பு, விவசாயிகள் பிரச்சினை, ஒரு கோடி வேலைவாய்ப்பு போன்றவை தொடர்பான வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்புகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை இருக்கிறது. எனவே காங்கிரஸ் அதிக அளவில் வெற்றி பெறும்,” என்றார் திருமா.