விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னத்தை பிரபலப்படுத்த ஒரு லட்சம் பானைகள் 

சிதம்பரம்: வெண்கலம், சில்வர், ரப்பர் குடங்களில் தண்ணீர் சேமித்து வைக்கும் பெண் களுக்கு இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின்பானையிலும் தண்ணீரை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.  
மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பிரசாரத்தின்போது அந்த சின்னத்தை தங்கள் தொகுதிகளில் பிரபலப்படுத்த ஒரு லட்சம் பானைகளுக்கு ‘ஆர்டர்’ கொடுத்துள்ளனர். இதனால் பானை செய்யும் குயவர்களின் வாழ்விலும் ஒளிபிறக்கும் என்று கூறப்படுகிறது. 
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. 
விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார். 
சிதம்பரம் தொகுதியில் அக் கட்சியின் தலைவர் திருமா வளவன் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையடுத்து ஒரு லட்சம் பானைகளைப் பயன் படுத்தி தங்கள் சின்னத்தை  பிர பலப்படுத்த திருமாவளவன் முடிவு செய்துள்ளார். 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கூறுகையில், “1000 நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் சிதம்பரம் தொகுதியில் ஒரு லட்சம் பானைகளுடன் பிரசாரத் தைத் தொடங்குவோம்,” என்றார்.