வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்டம்  மாறி வந்த வேட்பாளர் வேதரெத்தினம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச்  சேர்ந்தவர் வேதரெத்தினம் (50). நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்த இவர், ஆட்சியரிடம் சுயேச்சை வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மனுவைப் பரிசீலித்த ஆட்சியர் உறுதிமொழி பெற்ற பின்னர் வேட்புமனுவில் கையெழுத்திட்டார். அந்த வேட்பு மனுவை சரிபார்த்த மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, “இவர் நாகப்பட்டினம் மக்கள வைத் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருக் கிறார்,” என்று ஆட்சியரிடம் கூறினார். உடனே மனுவை பார்த்த ஆட்சியர், “ஐயா, நீங்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம்தான் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்,” என்றார். 
“வட்டாட்சியர் இங்குதானே கொடுக்கச் சொன்னார்,” என்று வேதரெத்தினம் பிடிவாதமாகக் கூறினார். உடனே, அருகில் இருந்த அலுவலர்கள் அவரை ஆட்சியர் அறையை விட்டு வெளியே அழைத்து வந்து சமாதானப்படுத்தி அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.