முதல்வர் பிரசார வாகனம் முன்பு பாய்ந்த இளம்பெண்ணால் பரபரப்பு

தர்மபுரி: இளம்பெண் ஒருவர் முதல்வரின் பிரசார வாகனம் முன்பு திடீரென விழுந்ததால் தர்மபுரியில் பரபரப்பு ஏற்பட்டது. 
21 வயதான ஜெனிபர் என்ற அந்தப்  பெண்ணின் தாயார் கடந்த 3 தினங்களாக பெண்ணாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனப் புகார் எழுப்பியுள்ள ஜெனிபர் இதுகுறித்து முதல்வரிடம் முறையிட முடிவு செய்தார். 
நேற்று முன்தினம் இரவு பிரசாரம் மேற்கொள்வதற்காக பெண்ணாகரம் வந்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது பேருந்து நிலையம் அருகே சாலையில் காத்திருந்த ஜெனிபர் முதல்வரின் பிரசார வாகனம் அருகே வந்தபோது திடீரென அதன் முன்பு பாய்ந்து சாலையில் விழுந்தார். இதனால் போலிசார் அவரை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் முதல்வருடன் வந்த அமைச்சர் அன்பழகன் ஜெனிபரிடம் விசாரணை நடத்தி அவரது தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.