தேர்தல் அதிகாரியிடமே கடன் கேட்ட மநீம வேட்பாளர்

தேர்தல் அதிகாரியிடமே கடன் கேட்ட மநீம வேட்பாளர்

1 mins read

தென்காசி: தேர்தல் வைப்புத் தொகையை செலுத்துவதற்கு 300 ரூபாய் குறைவாக இருந்ததால், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் தேர்தல் அதிகாரியிடமே கடன் கேட்ட சுவாரசிய சம்பவம் தென்காசியில் அரங்கேறியது. அத்தொகுதியில் மநீம சார்பாகப் போட்டியிடும் முனீஸ்வரன் கடைசி நாளன்று வேட்புமனு தாக்கல் செய்ய நெல்லை ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார். அப்போது தேர்தல் வைப்புத் தொகையாக ரூ.12,500 செலுத்த வேண்டும் என தேர்தல் அதிகாரி கூறினார். ஆனால் முனீஸ்வரனிடம் 300 ரூபாய் குறைவாகவே இருந்தது. இதையடுத்து தமக்கு கடனாக 300 ரூபாய் தந்து உதவுமாறும், வேட்புமனு தாக்கல் முடிந்த கையோடு அதை திருப்பித் தருவதாகவும் தேர்தல் அதிகாரியிடமே முனீஸ்வரன் கேட்க, அங்கு சிரிப்பலை எழுந்தது. எனினும் அதிகாரி தாம் பணம் கொடுக்கக் கூடாது என்று கூறவே, அவசரமாக வெளியே சென்று பணம் புரட்டி வந்து தமது மனுவைத் தாக்கல் செய்தார் முனீஸ்வரன்.