திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (இடது), தம்முடைய சகோதரர் மு.க.அழகிரியின் உருவப்படம் பொறித்த டி-சட்டை அணிந்த இளையர் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டது சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார் ஸ்டாலின். அந்த வகையில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரான பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் நடைப்பயிற்சி செய்தபடி இவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, வழியில் சென்ற பலரின் செல்ஃபி ஆசையையும் தீர்த்து வைத்தார். அவர்களில், இளையர் ஒருவர் அழகிரி படத்துடன் கூடிய டி-சட்டை அணிந்திருந்ததை ஸ்டாலின் கவனித்தாரா என்பது தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி இன்னமும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஆயினும், தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக விரைவில் அவர் குரல் கொடுக்கவுள்ளார் என்று மதுரை திமுகவினர் பேசிக்கொள்கின்றனர். படம்: இந்திய ஊடகம்
'அழகிரி'யுடன் ஸ்டாலின் செல்ஃபி
1 mins read
-

