ஏடிஎம் இயந்திரத்துக்குள் புகுந்த பாம்பு

ஏடிஎம் இயந்திரத்துக்குள் புகுந்த பாம்பு

1 mins read

கோவை: பீளமேடு அருகே ஐடிபிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரத்திற்குள் சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று நுழைந்ததால் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்கள் பீதியடைந்தனர். இயந்திரத்துக்குள் பாம்பு நுழைவதைக் கண்ட ஒருவர் சத்தமிட்டதையடுத்து அந்தப் பகுதி மக்கள் பாம்பை விரட்ட முயற்சி செய்தனர்.

ஆனால், அது இயந்திரத்துக்குள் சென்றுவிட்டதை அடுத்து பீளமேடு காவல் நிலைய போலீசார் சவுரிபாளையம் பகுதியில் வசித்து வரும் பாம்பு பிடிப்பவரான சஞ்சய் என்ற இளைஞரை அழைத்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் வங்கி ஏடிஎம் மையம் பராமரிப்பு நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போலீசார் வங்கி அதிகாரிகளையும் வரவழைத்து ஏடிஎம் இயந்திரத்தை திறந்தனர்.

சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஏடிஎம் இயந்திரத்திற்கு உள்புறமாக ஒளிந்திருந்த பாம்பை மீட்ட வாலிபர் சஞ்சய், படமெடுத்து சீறிய அந்தப் பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக கொண்டு சென்றார்.