புதுச்சேரி: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட புதுச்சேரி காவல்துறையைச் சேர்ந்த 8 பேரை போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் நேற்று விடுதலை செய்திருக்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமிகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்குப் புகார் வந்தது.
அதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் இரண்டு சிறுமிகளை மீட்டனர்.
தொடர்ந்து அந்தச் சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காவல்துறையைச் சேர்ந்த சிலரும் தங்களை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்க அதிர்ந்து போனது புதுச்சேரி. அதையடுத்து அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதும் அந்த விபசாரக் கும்பலிடம் இருந்து மேலும் இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து 2014 செப்டம்பர் 3ஆம் தேதி சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆய்வாளர் யுவராஜ் மற்றும் சுந்தர், துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ராஜாராமன் (ஓய்வு), தலைமைக் காவலர்கள் செல்வகுமார், குமாரவேல், பண்டரி நாதன், காவலர்கள் விஜயகுமார், சங்கர் உள்ளிட்ட 8 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் அப்போதைய காவல் துறைத்தலைவர் பிரவீர் ரஞ்சன்.
இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவுப்படி காணொளி கான்ஃபரன்சிங் மூலம் அடையாள அணி வகுப்பு நடத்தப்பட்டது.
அதில் 7 பேரை அடையாளம் காட்டிய சிறுமிகள், கூடுதலாக மற்றொரு துணை ஆய்வாளர் அனுசு பாட்ஷாவை அடையாளம் காட்ட அவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விசாரணை தீவிரமான நிலையில், அனைவரும் அப்போது தலைமறைவாகிவிட்டதால் அவர்களைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அந்தக் காவலர்களை பணிநீக்கம் செய்யும்படி அரசியல் கட்சியினரும், பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால் தலைமறைவாக இருந்த 8 காவலர்களையும் பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார் ஐ.ஜி.பிரவீர் ரஞ்சன்.
அதோடு இவர்கள் அனைவரையும் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவித்து அவர்களைப் பற்றி தகவல் கொடுத்தால் பொதுமக்களுக்குப் பரிசு கொடுக்கப்படும் என்று அறிவித்த சிபிசிஐடி, தலைமறைவாக உள்ளவர்கள் உடனடியாக சரணடையவில்லை என்றால் அவர்களின் புகைப்படம் வெளியிடப்படும் என்றும் சிபிசிஐடி கெடு விதித்ததால், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர்கள் சங்கர், செல்வகுமார் ஆகியோர் சரணடைந்தனர். மற்றவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் போதுமான ஆதாரம் இல்லாததால் 8 காவலர்கள் உள்ளிட்ட 18 பேரை விடுவிப்பதாக நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

