'நீட்' தேர்வு; கட்டுப்பாடுகள் விதிப்பு

'நீட்' தேர்வு; கட்டுப்பாடுகள் விதிப்பு

1 mins read

சென்னை: இந்தியா முழுவதும் 15 லட்சத்து 19,000 பேரும் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40,000 பேரும் இவ்வாண்டு 'நீட்' தேர்வு எழுதுகின்றனர். இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு வரும் 5ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி, கன்னடம், ஒடிசா, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் 'நீட்' நடைபெற உள்ளது. இதில் ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் மட்டும் அனைத்து நகரங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

'நீட்' தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப் படும். தேர்வு எழுத பால் பாயிண்ட் பேனா ஒன்று தேர்வு மையத்தில் வழங்கப்படும். ஜியோ மெட்ரிக்பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் உள்ளிட்ட எதற்கும் அனுமதி இல்லை.

கைத்தொலைபேசி, புளூடூத், பென் டிரைவ், கை கடிகாரம், கை கேமரா, காதணிகள், வளையல் போன்ற ஆபரணங்களுக்கு அனுமதியில்லை. மென்மையான நிறத்தில் ஆடையிருக்க வேண்டும். அரைக்கை சட்டைக்கு அனுமதி உண்டு. ஆனால் முழுக்கை சட்டை அணியக்கூடாது. தேர்வு மையத்துக்குள் ‌ஷு அணியக் கூடாது. செருப்பு மட்டும் அனுமதிக்கப்படும் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.