'தமிழகத்தில் தமிழருக்குத்தான் வேலைவாய்ப்பு'

'தமிழகத்தில் தமிழருக்குத்தான் வேலைவாய்ப்பு'

1 mins read
e15c9281-8b54-4b82-8a9e-8f499ffe305b
-

தமிழகத்தில் தமிழக இளையர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறும் நிலையை உருவாக்க திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி கூறியுள்ளார். பல்லாண்டுகளாக தமிழக இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பின்றித் தவிப்பதாக ஸ்டாலின் புதன்கிழமை ( மே 6ஆம் தேதி) வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே கிடைப்பதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு தமிழக இளையர்களுக்குக் கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுவதாக ஸ்டாலின் கூறினார்.

பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக வேலையில் சேர்ந்த 300 பேரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர் சுட்டினார். வேலைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக இளையர்கள் கலந்துகொண்டபோதும் அவர்களில் ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படாதது வருத்தத்திற்குரியது என்றார் ஸ்டாலின்.

இதுபோன்ற பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இவை அனைத்திற்கும் காரணம் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அரசாங்கமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் மாநில அரசாங்கமும் என்று அவர் குற்றம் சாட்டினார். தமது கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் இந்நிலை சரிசெய்யப்படும் என்று ஸ்டாலின் தமது அறிக்கையில் உறுதியளித்தார்.

இதற்கிடையே ஸ்டாலினை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மே 13ஆம் தேதி சந்திக்கவுள்ளார். சந்திரசேகர ராவ், கேரள முதலமைச்சர் பினராய் விஜயனையும் சந்தித்து பாஜகவுக்கு எதிரான தங்களது முயற்சிகளை தீவிரப்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்கள்.