தமிழக சட்டமன்றத் தலைவரின் உத்தரவு கடிதத்திற்குத் தடை

தமிழக சட்டமன்றத் தலைவரின் உத்தரவு கடிதத்திற்குத் தடை

1 mins read
b8d3c28f-87af-46c0-8462-363a8d89c6ed
-

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (அதிமுக) சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், அக்கட்சியைவிட்டுப் பிரிந்து உருவான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) தலைவர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டது குறித்து தமிழக சட்டமன்றத் தலைவர் எடுத்த நடவடிக்கையை இந்திய உச்சநீதிமன்றம் தடை செய்திருக்கிறது.

ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய அந்த மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், அதனால் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத் தலைவர் ப. தனபாலனிடம் புகார் அளித்தது. இந்தப் புகார் குறித்து ஏழு நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு தனபாலன் அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களிடம் கடிதம் வழியாக உத்தரவிட்டார்.

இது நடந்து சில மணி நேரத்திலேயே சட்டமன்றத் தலைவருக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைக்கப்போவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் இந்திய உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். சட்டமன்றத் தலைவர் பாரபட்சத்துடன் செயல்படுகிறார் என்றும் அவரால் தாங்கள் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்றும் அம்மூவரும் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்நோக்கும் தனபாலன் தங்களைத் தகுதிநீக்கம் செய்யும் அதிகாரமற்றவர் என்று அவர்கள் தங்கள் மனுவில் கூறினர்.

வழக்கை ஏற்று விசாரிக்க ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம், தனபாலனின் உத்தரவுக் கடிதத்தைத் தடை செய்தது.