சென்னை: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தைப் புறக்கணிக்கக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
"உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது," என்று அவர் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன.
அவற்றில் 27 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில் காலியாக உள்ள 4 பணியிடங்களை நிரப்பும் நோக்கத்துடன் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அனிருத்த போஸ், கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி போபண்ணா, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய், இமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவர்களின் திறமை குறித்தோ, அனுபவம் மற்றும் அப்பழுக்கற்ற தன்மை குறித்தோ யாருக்கும் எந்த ஐயமும் இல்லை.
மாறாக, இவர்களின் சொந்த உயர் நீதிமன்றங் களைச் சேர்ந்த மூத்த நீதிபதிகள் பலர் ஏற்கெனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் அந்த உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வாய்ப்பு வழங்கப்படுவதைப் பார்க்கும்போது தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது," என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

