மதுரை: மதுரையைச் சேர்ந்த மணவாளன் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
மதுரை கள்ளிக்குடி, திருமங்கலம் இடையேயான ரயில்வே பாதையில் கடந்த 8ஆம் தேதி இரண்டு ரயில்கள் எதிரெதிரே இயக்கப்பட்டு பெரும் விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. மொழிப்பிரச்சினை காரணமாகவே இந்த நிகழ்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு ரயில்வே நிர்வாகம் சில மாறுதல்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது.
பொதுவாக ரயில்வே ஊழியர்களுக்கான தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளிலேயே நடைபெறுகிறது. எனவே பணிக்குத் தேர்வாகிறவர்களில் பெரும்பாலானவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். தமிழகத்தில் ரயில்வே ஊழியர்கள் பலர் தமிழ் மொழி தெரியாதவர்களாகவே உள்ளனர். தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் நடத்தப்படுவதால் தமிழ் மாணவர்கள் உள்பட அந்தந்த வட்டார மொழி பேசும் மாணவர்கள் ரயில்வே தேர்வுகளில் பெருமளவில் தேர்ச்சி பெறுவதில்லை.
தமிழகத்தில் ரயில்வேயின் முக்கிய பொறுப்புகளில் இருப்போருக்குப் பெரும்பாலும் தமிழ்த் தெரிவதில்லை. கள்ளிக்குடி, திருமங்கலம் இடையேயான ரயில் பாதையில் மேற்கண்ட நிகழ்வு நடைபெற்றபோது தொலைத்தொடர்பிலும் பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது. திருச்சி மண்டலத்தில் 200=க்கும் மேற்பட்ட கார்டுகள் பணியாற்றும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தமிழ் தெரிவதில்லை.
"எனவே தமிழ் மொழி தெரிந்தவர்களை தமிழக ரயில்வே பணிகளில் அமர்த்த வலியுறுத்தி ரயில்வே யூனியன்கள் சார்பிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.
"ரயில்வே துறை பணிகளில் குறிப்பாக ரயில் நிலைய மாஸ்டர், லோகோ பைலட், கார்ட்ஸ், பாய்ண்ட்ஸ்மேன் உள்ளிட்ட முக்கிய பணிகளில் தமிழகத்தில் தமிழ்மொழி தெரியாதவர்களை பணியமர்த்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்," என்று அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தென்னக ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

