மோடிக்கு எடப்பாடி வாழ்த்து

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி முன்னிலைப் பெற்றுள்ள நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தமிழக நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக தற்போது முன்னிலை வகித்துள்ள நிலையில் பழனிசாமியின் வாழ்த்துக் கடிதம் வெளிவந்துள்ளது.  

தமிழக மக்களவை தேர்தலில் திமுக 37 இடங்களைப் பிடித்துள்ளது. அதிமுகவோ இரண்டு இடங்களை மட்டும் பிடித்துள்ளது.

பழம்பெரும் தலைவர்கள் மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகியோரின்றி திமுகவும் அதிமுகவும் முதன்முறையாக மோதியுள்ளன. வறட்சி, பொருள் சேவை வரி, பணமதிப்பிழப்பு ஆகியவற்றால் தமிழகத்தில் வாக்காளர்களின் அதிருப்தி அதிகரித்திருப்பதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். 

மேலும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மங்கள், ‘நீட்’ தேர்வு சர்ச்சை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு, எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான சர்ச்சை, பொள்ளாச்சி பாலியல் சர்ச்சை உள்ளிட்ட காரணங்களாலும் அதிமுகவின் ஆதரவு சரிந்திருப்பதாகக் கருதப்படுகிறது.