சென்னை: எவராலும் ஒருகாலும் வீழ்த்த முடியாதது திராவிட இயக்கம். அதன் வெற்றிப் பயணம் தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் தன் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "வரலாற்றுச் சிறப்புமிக்க = நாடும் ஏடும் போற்றும் நல்ல மகத்தான வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள்.
"திராவிட இயக்கத்தால், பெரியார், அண்ணா, தலைவர் கருணாநிதி ஆகியோரால் பண்படுத்தப்பட்டு = பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் சீரிய இடம் உருவாக்கப்பட்டிருப்பது இந்திய அளவில் போற்றுதலுக்கு உரிய பொருள் ஆகியிருக்கிறது. ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் திமுக கூட்டணி ஈர்த்திருக்கிறது. அத்தகைய மாபெரும் வெற்றியை அடைந்ததற்கு, தொடர்ந்து நல்லிதயங்களின் வாழ்த்துகள் பொழிந்த வண்ணம் உள்ளன.
"தோழமைக் கட்சிகளின் மதிப்புமிகு தலைவர்கள் கழகத் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு அன்புடன் வருகை தந்து வாழ்த்துகளைப் பரிமாறி மனமகிழ்ச்சி கொள்கிறார்கள். ஊடகங்களிடம் வெற்றிச் செய்தியினைப் பகிர்ந்துகொள்ளும் தோழமைக் கட்சித் தலைவர்களும் ஆதரவு அமைப்புகளின் தலைவர்களும், "திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் வகுத்த வியூகங்களே இந்த மகத்தான வெற்றிக்குக் காரணம். தோழமைக் கட்சிகளை உணர்வுபூர்வமாக ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணியை அமைத்து, மோடிக்கு எதிரான வெற்றியைப் பெறுவதற்கு இந்தியாவிலேயே முதன்மையானவர் என்பதை ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார். தனது மாநிலத்திற்குள் பாஜக நுழைய முடியாதபடி தடுத்து, நிறுத்திய ஒரு மாநிலக் கட்சித் தலைவர் ஸ்டாலின் மட்டும்தான். தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் அதன் கொள்கைகளும் வலுவாக இருப்பதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது," என மனம்திறந்து தெரிவித்திருக்கிறார்கள்.
திராவிட இயக்கத்தை அழிக்க, எத்தனை வித்தைகள் செய்து எத்தனை பேர் குட்டிக்கரணம் போட்டாலும் இங்கே எடுபடாது என்பதே மக்களின் பெரும் தீர்ப்பு.
தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் திமுக கூட்டணி 38 மக்களவைத் தொகுதிகளை வென்றிருக்கிறது.
இந்த மாபெரும் வெற்றியை நான் மட்டுமே சொந்தம் கொண் டாட முடியாது. நம்மை ஆளாக்கிய தலைவர் கருணாநிதி வகுத்தளித்த வழியில், தேர்தல் களப் பணியில் தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்த கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் அன்பு உடன்பிறப்புகளும் இல்லாமல், இந்த வெற்றி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது.
ஆட்சியாளர்களின் அதிகார வரம்பு மீறல்களை எதிர்கொண்டு, சரியான = தெளிவான = உறுதியான வியூகத்தை வகுத்து, அதனைக் கிஞ்சிற்றும் பிசகாமல் களத்தில் செயல்படுத்திய கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் இந்த வெற்றியின் முக்கியப் பங்கு தாரர்கள் என்று பாராட்டினார் ஸ்டாலின்.

