சென்னை: நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்= அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக எம்.பி.க்கள் 20 பேருக்கும் அழைப்பிதழ் வந்துள்ளது.
ஆனால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு இதுவரை முறையான அழைப்பு வரவில்லை. எனவே மோடி பதவி ஏற்பு விழாவை திமுக எம்.பி.க்கள் புறக்கணிக்க உள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 20 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 3 பேர் எனத் திமுகவுக்கு மொத்தம் 23 எம்.பி.க்கள் உள்ளனர்.
இதன் மூலம் பா.ஜனதா, காங்கிரசை அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாகத் திமுக விளங்குகிறது.
ஆனாலும் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்காதது திமுக தலைவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தால் மட்டும்தான் நாங்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்போம் எனத் திமுக செய்தி தொடர்பாளரும், மேலவை உறுப்பினருமான டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மோடியைக் கடுமையாகத் தாக்கி பேசி இருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
என்றாலும் ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவி ஏற்றபோது மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது எனத் திமுக மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
பா.ஜனதா நிர்வாகிகள் கூறும்போது, மு.க.ஸ்டாலினின் மோடிக்கு எதிரான பிரசாரத்தால் எங்கள் மேலிடம் வருத்தம் அடைந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் எங்கள் கட்சியைச் சீரமைக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
எங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கு சமூக வலைதளங்களில் சரியான பதிலடி கொடுக்க தயாராகி வருகிறோம். மு.க.ஸ்டாலின்தான் எங்களுக்கு முதல் எதிரி என்றனர்.

