மக்களின் தாகம் தீர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்

மக்களின் தாகம் தீர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்

2 mins read
87bfb998-75ad-4f5c-9a71-b596973d0ed8
புதுக்கோட்டையில் சவாரி செல்லும் வழியில் ஒருவரின் தாகத்தை தீர்க்க குடிநீர் கொடுக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் ஏ.அன்வர். படம்: ஊடகம் -

புதுக்கோட்டை: புதுக்கோட்டை யில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்து மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறார்.

புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியைச் சேர்ந்தவர் ஏ.அன்வர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளா கத் தனது ஆட்டோவில் குடிநீர் கேனை எடுத்துச்செல்லும் இவர், தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளின் தாகத்தை மட்டு மின்றி, தான் செல்லும் வழியெங் கும் மக்களின் தேவை அறிந்து அவர்களின் தாகத்தையும் தீர்த்துவருகிறார்.

பிறரின் தாகம் தீர்க்கும் இவரது சேவையைப் பொதுமக்கள் மனம் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அன்வர் கூறிய போது, "ஆட்டோவில் பயணம் செய்யும்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டோர் மட்டுமின்றி மற்றவர்களும் குடிநீர் இல்லாமல் சிரமப்படுவதைப் பார்த்துள்ளேன். பலர் ஆட்டோவில் மயக்கம் அடைந்ததும் உண்டு.

"உரிய இடத்துக்குச் செல் வதற்குள் குழந்தைகளும் தாகத் தில் தவிப்பதைப் பார்த்து இதற்கு ஏதேனும் செய்யவேண்டும் என முடிவு செய்தேன்.

"சிலர் தண்ணீர் இருக்கிறதா என்று கேட்டு நான் குடிப்பதற்காக வைத்திருந்த பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடித்துள்ளனர்.

"இதைத் தொடர்ந்து ஆட்டோ வில் தண்ணீர் கேன் வைப்பதற்கு ஏற்றபடி ஸ்டாண்ட் ஒன்றை அமைத்து அதில் 25 லிட்டர் தண்ணீர் கேனை வைத்து பயணி களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் இலவசமாக குடிநீர் வழங்கி வரு கிறேன். தினமும் 2 கேன் தண்ணீர் விநியோகிக்கிறேன். இதனால் எனக்கு ஒரு நாளைக்கு ரூ.60 செலவாகிறது.

"என் ஆட்டோவில் எப்போதும் தண்ணீர் கேன் இருக்கும் என்று நன்கு தெரிந்த பலரும் என்னிடம் வந்து தண்ணீர் வாங்கி குடிப் பார்கள். வெயில் நேரங்களில் சாலையில் வயதானவர்கள் நடந்து செல்வதைப் பார்த்தால் நானே ஆட்டோவை நிறுத்தி தண்ணீர் கொடுப்பேன்.

"ஆட்டோ ஓட்டுவது மூலம் நாளொன்றுக்கு கிடைக்கும் ரூ.500 வருமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியைவிட தவித்த வாய்க் குத் தண்ணீர்க் கொடுக்கும் செய லால் எனக்கு ஏற்படும் மகிழ்ச் சியை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. இந்த சேவையை என் றென்றும் தொடர்வேன்," என்கிறார் அன்வர்.