சென்னை: தாம்பரம் அருகேயுள்ள சிட்லபாக்கம் பேரூராட்சியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இது, அப்பகுதி மக்களின் நிலத்தடி நீராதாரமாக விளங்குகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படாமல், குப்பைக் கழிவுகளாகச் சீரழிந்து காணப்பட்டது. இதனால், ஏரியில் போதுமான அளவு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியவில்லை.
இந்நிலையில், அப்பகுதி மக்களுடன் இணைந்து ஏரியைத் தூய்மைப்படுத்தித் தூர்வார 'சிட்லபாக்கம் ரைசிங்' என்ற தன்னார்வ அமைப்பு முடிவு செய்தது. அதன்படி, நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து, ரைசிங் அமைப்பினர் கூறும்போது, "ஏரியைத் தூர்வாரும் பணிக்கு இதுவரை பொதுமக்கள் ரூ.7 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர். பொதுப்பணித் துறையினரின் வழிகாட்டுதலின்படியே பணிகள் நடக்கின்றன," என்றனர்.
இதுகுறித்துப் பொதுப்பணித் துறை பொறியாளர் ஒருவர் கூறும்போது, "சிட்லபாக்கம் ஏரியில் உள்ள குப்பைகளை அகற்ற மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசே விரைவில் தூர்வாரும் பணியைத் தொடங்கவுள்ளது," என்றார்.

