சென்னை: தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களின் உறுப்புதான அமைப்புகளையும் தேசிய அளவில் செயல்படும் தேசிய உறுப்பு மாற்று அமைப்புடன் (NOTTO) இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கான பணிகளில் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய அளவில் பதிவுக்கால அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ள தமிழக நோயாளிகள் பயன்பெற முடியாத சூழ்நிலை ஏற்படும் என தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானமாகப் பெறப்படும் உடல் உறுப்புகள் தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர்கள்தான் பயன்பெறுவார்கள். தமிழகத்தில் இருந்து வெகுதொலைவில் உள்ள வடமாநிலங்களுக்கு உறுப்புகளை எடுத்துச்செல்லும்போது அவை வீணாவதற்கும் அதிகம் வாய்ப்புள்ளது என்றும் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

