சுடச் சுடச் செய்திகள்

உலகின் சுட்டெரிக்கும் நகரங்களில் 10 வடஇந்தியாவில்

புதுடெல்லி: உலகின் சுட்டெரிக்கும் அதிவெப்பத்தைக் கொண்ட 15 நகரங்களின் பட்டியல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்­பட்டது. அந்தப் பட்டியலில் உள்ள நகரங்களில் 10 நகரங்கள் வடஇந்திய நகரங்களாகும். 

ஞாயிற்றுக்கிழமை நிலவிய வெப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அந்தப் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மற்றும் ஸ்ரீகங்காநகர் ஆகிய நகரங்களே முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. முதல் இடத்தைப் பிடித்த சுருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 48.9 டிகிரி செல்சியசாக இருந்தது.  இரண்டாம் இடத்தைப் பிடித்த ஸ்ரீகங்காநகரில் 48.6 டிகிரி செல்சியசாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் ஜகோபாபாத் நகரில் 48 டிகிரியும் உத்தரப்பிரதேசத்தின் பாண்டா நகரில் 47 டிகிரி செல்சியசாகவும் ஹரியானாவின் நர்ன்ருல் நகரில் 47.2 டிகிரியாகவும் இருந்தது.

புதுடெல்லி, ஜெய்ப்பூர், கோட்டா, ஹைதராபாத், லக்னோ ஆகிய நகரங்களில் 45 டிகிரி செல்சியசைத் தாண்டியுள்ளது.

குளிர்ப் பிரதேசமான இமயமலை சார்ந்த பகுதிகளான ஸ்ரீநகர், நைனிட்டல், சிம்லா ஆகிய இடங்களில் வழக்கமான வெப்பநிலையைக் காட்டிலும் கூடுதலாக 4 டிகிரி செல்சியஸாக இருந்தது.

அதேபோல் தமிழகத்தில் நேற்று 11 நகரங்களில் 37.7 டிகிரி செல்சியஸ் அளவைக் காட்டிலும் அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது. 

வெப்பசலனத்தால் ஏழு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்குப் பருவமழை அரபிக் கடலில் பரவி வருகிறது. அதன் காரணமாக தென்மேற்குத் திசையில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று தமிழகம் நோக்கி வீசத் தொடங்கியுள்ளது. 

இவை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த சில தினங்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 5 செமீ, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக திருத்தணியில் 41.6 டிகிரி, சென்னை விமான நிலையத்தில் 41.1 டிகிரி, வேலூர் மற்றும் கடலூரில் 40 டிகிரியும், மதுரை விமான நிலையத்தில் 39.45 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் தலா 38.8 டிகிரி, புதுச்சேரி, சேலம் ஆகிய இடங்களில் தலா 37.8 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 37.7 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும், ஈரப்பதம் மிகுந்த கடல் காற்று வீசுவதாலும் தமிழகத்தில் படிப்படியாக வெயில் குறையும். நேற்று முன்தினம் 16 நகரங்களில் 37.7 டிகிரி வெயில் பதிவாகி இருந்த நிலையில் நேற்று 11 இடங்களாகக் குறைந்துள்ளதாக சென்னை வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் வடக்கு மாநிலங்களை வெயில் வாட்டி வதைக்கும் அதே வேளையில் மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய பகுதிகளில் கனமழை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon