கே.எஸ். அழகிரி: ஒரே மொழி, ஒரே கலாசார‌ம்,  ஒரே நாடு என்பது ச‌ர்வாதிகார‌ம்

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ். அழகிரி இந்தித் திணிப்பு முயற்சியை வன்மையாகக் கண்டித்துள்ளார். 

“மும்மொழி கொள்கையைக் கொண்டுவ‌ர‌ வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி முனைப்பாக உள்ளது. இந்தி பேசாத‌ ம‌க்களிடம் திணிப்பு என்ப‌து கூடாது என‌ நாடாளும‌ன்ற‌த்தில் ச‌ட்ட‌ப் பாது­காப்பு உள்ள‌து என்பதை உணர்ந்து பாஜக செயல்பட வேண்டும் என்று  கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

“பாரதிய ஜனதா கட்சி ஒரே மொழி, ஒரே கலாசார‌ம், ஒரே நாடு எனச் சொல்வ‌து ச‌ர்வாதிகார‌ம். இந்தியா பல இன மக்கள் வாழும் ப‌ன்முகத்தைக் கொண்ட‌ நாடு. என‌வே மோடி அர‌சு, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்றார் கே.எஸ்.அழகிரி.

மத்திய அரசு, அண்மையில் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தை வெளியிட்­டது. 

இஸ்ரோவின் முன்னாள் தலை­வரான கஸ்தூரி ரங்கன் சமர்ப்பித்த இந்த வரைவுத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியைக் கட்டாயமாக படிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு தமிழகம், கர்நாடகம், மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தன.

கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து இந்தி கட்டாயமில்லை என வரைவுத் திட்டத்தில் திருத்­தம் செய்து பின்னர் மத்திய அரசு அறிவித்தது. இந்தி பேசாத மாநிலங்களில் விரும்பிய மொழியை மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம் என்று அறி­வித்தது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றுப் பதிவிட்ட டுவிட்டில் “மற்ற மாநிலங்களிலும் தமிழை விருப்பப் பாடமாகச் சேர்த்து அங்குள்ளவர்கள் படிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இது உலகின் பழமையான ஒரு மொழிக்குச் செய்யும் சிறந்த சேவை­யாக இருக்கும்,” என்று குறிப்பிட்டிருந்தார். 

இது சர்ச்சையானதைத் தொடர்ந்து மாலையில் அந்த டுவிட் பதிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது, “பிற மாநிலங்களிலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்­தில் போடப்பட்ட பதிவு அது. 

"ஆனால், முதல்வரின் சமூக வலைத்தளப் பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. தமிழை மற்ற மாநிலங்களில் படிக்கக் கூடாதா? 

"எந்த வடிவத்திலும் இந்தியைத் தமிழகம் ஏற்காது, இதுதான் தமிழக அரசின் கொள்கை. இருமொழிக் கொள்கையில் இருந்து அரசு ஒருபோதும் பின்வாங்காது, இரு மொழிக் கொள்கையில் எவ்வித மாறுபாடும் இல்லை,” என்று விளக்கமளித்திருக்கிறார்.

"மொழி விஷயத்தில் அரசியல் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.

"எந்த வடிவத்திலும் இந்தியைத் தமிழகம் ஏற்காது. இதுதான் அரசின் கொள்கை. இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம். 

"தமிழக அரசின் மொழிக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை," என்று மீண்டும் அமைச்சர் வலியுறுத்தினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon