சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி, தமிழர்க்கு ஒரு நீதியா? என சீமான் ஆவேசம்

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி, தமிழர்க்கு ஒரு நீதியா? என சீமான் ஆவேசம்

1 mins read

சென்னை: சஞ்சய் தத் வழக்கில் மத்திய அரசு விடுதலையை நிராகரித்தபோதும் மாநில அரசே தண்டனைக்கழிவு வழங்கி விடுவித்த நடைமுறையை அடியொற்றி, தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனைக்கழிவு வழங்கி ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரியுள்ளார்.

அவரது அறிக்கையில், "மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இந்திய ஆயுதச் சட்டத்தில் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின்பும், மராட்டிய மாநில அரசே விடுதலை செய்திருக்கிற தகவலானது தம்பி பேரறிவாளன் தொடுத்த தகவலறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தெரியவந்திருப்பது

ஏழு தமிழர்களை விடுதலை செய்யத் தமிழக அரசுக்குத் தடையேதுமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. 161வது சட்டப்பிரிவின்படி, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஏறக்குறைய ஓராண்டாகவுள்ள நிலையில் இன்னும் அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் தராது மவுனம் சாதிக்கிறார் தமிழக ஆளுநர். மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்ற ஓர் அரசின் முடிவை, மக்களால் தேர்வுசெய்யப்படாத ஆளுநர் தடுத்து வைத்திருக்கிறார் என்றால், இது மக்களாட்சித் தத்துவத்திற்கே மாபெரும் பாதகத்தையும், களங்கத்தையும் ஏற்படுத்துவதாகும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.