களக்காடு: நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பிதோப்பைச் சேர்ந்த சுரேஷின் மனைவி அகிலா, 26. பொறியியல் பட்டதாரியான அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கருவுற்ற அகிலாவை கடந்த புதன்கிழமை பிரசவத்துக்காக திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தபோது அங்கு மருத்துவர்கள் இல்லை எனவும் இரு செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர் என்றும் கூறப்பட்டது.
செவிலியர்களே பிரசவம் பார்த்ததில் இரவு 7.45 மணிக்கு அகிலாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிறிது நேரத்தில் அகிலாவும் அவரது குழந்தையும் உயிரிழந்தனர். மருத்துவர்கள் இல்லாததாலும் செவிலியர்களே பிரசவம் பார்த்ததாலும் தாயும் குழந்தையும் உயிரிழந்ததாக அகிலாவின் உறவினர்கள் குற்றம் சாட்டி இரவு முழுவதும் மருத்துவ நிலையத்தின் முன்னால் போராட்டம் நடத்தினர்.
30 படுக்கைகள் கொண்ட அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை செய்யும் வசதியும் உள்ளது. நான்கு மருத்துவர்கள் அங்கு பணிபுரிகின்றனர். அங்கு பணிபுரியும் செவிலியர் நோயாளிகளிடம் அலட்சியம் காட்டுவது குறித்து மாவட்ட சுகாதாரத் துறைக்குப் பலமுறை பொதுமக்கள் மனு அளித்தும் சுகாதாரத் துறையினர் கண்டு கொள்ளவில்லை என்று அங்கிருந்தோர் கூறினர்.

