ராமேசுவரம்: சுமார் நூறு மீட்டர் தூரத்துக்கு கடல் திடீரென உள்வாங்கியதால் ராமேசுவரம் கடற்கரையில் கூடியிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பலர் வேக வேகமாக கடற்கரையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
கடந்த 2 நாட்களாக ராமேசுவரம், தனுஷ்கோடி, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்று வீசி வருகிறது. தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என கடலோரக் காவல்படை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் சங்குமால், ஓலைக்குடா, அக்னிதீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென கடல் 100 மீட்டர் உள்வாங்கியது. இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடல் உள்வாங்கியதால் பவளப்பாறைகள், நட்சத் திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை வெளியே தெரிந்தன. சிறிது நேரத்தில் கடல் பழைய நிலைக்கு வந்ததால், சுற்றுலா பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

