மதுரை: பிரபல திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித், முன்பிணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பா. இரஞ்சித், ராஜராஜ சோழனைப் பற்றி அவதூறாகப் பேசியதாகவும் அவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக அமைந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
எனவே, இரஞ்சித்தைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் பாலா புகார் அளித்தார்.
இதையடுத்து இரஞ்சித் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கில் பேசியது), 153(ஏ), (1) (எ) (பல்வேறு பிரிவினரிடையே விரோதத்தை உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது) ஆகிய பிரிவுகளின்கீழ் நேற்று முன்தினம் போலிசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் பா. இரஞ்சித், முன்பிணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
"உள்நோக்கத்துடன் நான் கருத்து தெரிவிக்கவில்லை. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் உள்ள குறிப்புகளையே நானும் பேசினேன். என்னுடைய பேச்சு சமூக வலைத்தளங்களில் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது," என்று அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

