தண்ணீரின்றி தவிக்கும் தீயணைப்பு வீரர்கள்: பொதுமக்கள் ஒன்றுகூடி தீயை அணைத்தனர்

தண்ணீரின்றி தவிக்கும் தீயணைப்பு வீரர்கள்: பொதுமக்கள் ஒன்றுகூடி தீயை அணைத்தனர்

2 mins read

சென்னை மாநகரில் கடந்த இரு மாதங்களாக குடிநீர்ப் பஞ்சம் வாட்டி வதைக்கிறது.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வற்றியதாலும் பருவமழை பொய்த்ததாலும் போதுமான குடிநீர் இன்றி மக்கள் தவிக்கின்றனர். நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் பாதிப்பு அதிகரித்துவிட்டது.

சென்னை மாநகருக்கு நாள் ஒன்றுக்கு 880 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை. தற்போது 525 மில்லியன் லிட்டர் மட்டும்தான் கிடைத்து வருகிறது.

கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குடிநீர் குறைந்துவிட்டதால் அதன் பாதிப்பு எல்லா மட்டங்களிலும் பிரதிபலித்து வருகிறது.

சென்னை புறநகர் பகுதியான மேடவாக்கத்தில் குப்பை கிடங்கு ஒன்றில் தீப்பற்றியதைத் தொடர்ந்து அப்பகுதிமக்கள் தீயணைப்புப் படைக்குத் தகவல் கொடுத்தனர். ஆனால் தீயை அணைக்கப் போதுமான தண்ணீர் தங்களது வாகனங்களில் இல்லை என்றும் தண்ணீருக்கு ஏற்பாடு செய்தால் வந்து தீயை அணைப்பதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து உள்ளூர் பஞ்சாயத்து பணியாளர்கள் விரைந்து சென்று அருகிலுள்ள சித்தேரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்து விட்டனர்.

இதுகுறித்து மேடவாக்கம் பஞ்சாயத்து அலுவலகத்தைச் சேர்ந்த பாபு என்பவர் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'விற்கு அளித்த பேட்டியில், தீயணைப்புத் துறையினர் உதவி இன்றி நான்கு மணி நேரம் போராடி தாங்களே தீயை அணைத்துவிட்டதாகக் கூறினார்.

சென்னையிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த 200 நாட்களாக சரியான மழை இல்லாததால் குடிநீர்ப் பஞ்சம் நிலவி வருகிறது. அடுத்த மூன்று மாதத்திற்குள் தேவையான மழை பெய்யாவிட்டால் இந்தப் பிரச்சினை மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் வறண்டு வருவதால் சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.

போர்வெல்களில் தண்ணீர் மட்டம் மிகவும் கீழே போய்விட்டதால் அந்தத் தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள் மெட்ரோ வாட்டர் எப்போது வரும் என காத்திருக்கின்றனர்.

தண்ணீர் லாரிகளும் போதிய அளவில் வராததால் மக்கள் அன்றாட அடிப்படை தேவைகளுக்குக் கூட தண்ணீரைப் பயன்படுத்த இயலாமல் தவித்து வருகிறார்கள்.

அரசியல் கட்சியினர் சொந்த செலவில் குடிநீர் லாரிகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.