சென்னை தண்ணீர் பஞ்சம்: மருத்துவமனைகளில் அவலம்

சென்னை தண்ணீர் பஞ்சம்: மருத்துவமனைகளில் அவலம்

2 mins read
8796bcde-e716-4e8a-a823-74536550afbd
சில இடங்களில் பீப்பாய்களில் நீரை சேமித்து வைத்து நோயாளிகளின் பயன்பாட்டுக்கு வழங்கும் நிலை உருவாகியுள்ளது. படம்: சதீஷ் -

சென்னையில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவிவரும் சூழலில், மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை குரோம்பேட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏராளமான உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தவிர, தினமும் நூற்றுகணக்கான வெளிநோயாளிகளும் சிகிச்சைக்கான அங்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு 25 முதல் 30 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை முழுவதும் தற்போது கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், பொதுமக்கள் மட்டுமின்றி ஏராளமான வணிக நிறுவனங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள் எனப் பல்வேறு தரப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துத் தனியார் மருத்துவமனை இயக்குநர் கூறுகையில், "தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக தினமும் 15 முதல் 18 நோயாளிகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவசர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு மட்டும் தற்போது அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

"மருத்துவமனையில் தங்கியிருக்கும் நோயாளிகளுக்குத் தண்ணீர்க் கொடுப்பது, அறுவை சிகிச்சை அறையையும் மருத்துவக் கருவிகளையும் சுத்தப்படுத்துவது போன்ற தேவைகளுக்காக ஏராளமான தண்ணீர்ச் செலவாகிறது. லாரிகளில் கிடைக்கும் தண்ணீரை வைத்துத்தான் இவ்வளவு நாள் சமாளித்து வந்தோம். தற்போது லாரி நீரும் சரியாகக் கிடைக்காததால் இனிவரும் நாட்களில் என்ன செய்வது எனத் தெரியவில்லை," என்று கூறினார்.

சென்னையில் 13 முக்கியமான அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் 60 லட்சம் லிட்டரை மட்டுமே குடிநீர் வாரியம் வழங்குகிறது.

இதனால், பணம் கொடுத்துக் குடிநீர் வாங்கக்கூடிய நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்னும் சில இடங்களில் பீப்பாய்களில் நீரை சேமித்து வைத்து நோயாளிகளின் பயன்பாட்டுக்கு வழங்கும் நிலை உருவாகியுள்ளது.

எனவே தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமாவது போதுமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.