மழைநீர் சேமிப்புத் திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிடத் தமிழக அரசு தயாராகி வருகிறது.
தமிழகத்திற்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிக நீர்வரத்துக் கிடைத்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களுக்குத் தென்மேற்குப் பருவமழை காலத்திலும் நீர்வரத்து உள்ளது.
வடகிழக்குப் பருவமழை கடந்த ஏமாற்றிவிட்டதால் பல மாவட்டங்களில் ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டுவிட்டன.
தொடர்ச்சியாக நீர் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டமும் சரிந்துள்ளது. இதனால் தண்ணீர்த் தட்டுப்பாடு நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 2004ல் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தினார். இதனால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக அதிகரித்தது. அதன்பின் இத்திட்டத்தை யாரும் தீவிரப்படுத்தவில்லை என்று தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தற்போது தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வீடுகளில் மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகள் தூர்ந்து கிடக்கின்றன.
இந்நிலையில், தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தைத் தீவிரமாக செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை மானியம் வழங்கி செயல்படுத்துவது தொடர்பாக உள்ளாட்சி துறைகளின் உயர் அதிகாரிகளுடன் அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

