தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பில் இந்திய நாடாளுமன்றம் சிறப்புத் தீர்மானங்களைக் கொண்டுவரவேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் எடுக்கும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்குத் தமது கட்சி ஒத்துழைப்பு நல்கும் என்றும் திரு ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
தண்ணீர் கொடுக்க கேரள அரசாங்கம் முன்வந்தபோதும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த உதவியை ஏற்க மறுத்ததாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார். திரு பழனிசாமி செய்தது கண்டனத்திற்குரியது என்று கூறிய திரு ஸ்டாலின், தாம் பினராயை அழைத்துப்பேசி பாராட்டுகளைத் தெரிவித்ததாகச் சொன்னார்.
தமிழகத்தில் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் பலரின் இயல்புநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. சென்னைப்பகுதியில் பலரது வீடுகளில் அவ்வப்போது தண்ணீர் விநியோகம் திடீரென நின்றுபோவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருந்தபோதும் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு மாயையை ஊடகங்கள் உருவாக்கியிருப்பதாகத் திரு பழனிசாமி குறைகூறுகிறார். சென்னையின் பல இடங்களில் ஏரிகள் காய்ந்து போனாலும் தண்ணீர் இருப்பை உறுதி செய்ய மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

