சென்னை: அமமுக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனைத் திட்டி, அவரின் உதவியாளரிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்படியான ஒலிப்பதிவு ஒன்று அண்மையில் வெளியானது. இதையடுத்து, அவர் கட்சியைவிட்டு விரைவில் நீக்கப்படுவார் என்று டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதனால், தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, தங்க தமிழ்ச்செல்வனை ஈர்க்கும் முயற்சியில் திமுக தீவிரம் காட்டியது.
அதிமுகவின் கோட்டையாகத் திகழும் தேனியில் திமுக வலுவாகக் காலூன்ற தங்க தமிழ்ச்செல்வனின் தனிப்பட்ட செல்வாக்கு கைகொடுக்கும் என்பது திமுகவின் எண்ணம்.

