திருப்பூர்: கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறினாலும் பின்னலாடைக்குப் பெயர்போன தமிழகத்தின் திருப்பூரில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து ஏராளமான 'ஆர்டர்'கள் குவிந்துள்ளதால் உரிய காலத்தில் அவற்றைச் செய்து கொடுக்க இயலாமல் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தவித்து வருகின்றன. தொழிலாளர் பற்றாக்குறையே இதற்குக் காரணம்.
ஆகையால், தொழிலாளர்களை ஈர்க்கும்விதமாக பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. ஆண்டு முழுவதும் வேலைக்கு வரும் ஊழியர்களுக்குத் தங்க நாணயம், வெளிநாட்டுச் சுற்றுலா, விரும்பிய நேரத்தில் வேலைக்கு வர அனுமதி எனப் பல சலுகைகளை வழங்க அந்நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஆனாலும், ஊழியர் பற்றாக்குறை தீர்ந்தபாடில்லை என முதலாளிகள் புலம்புகின்றனர்.
ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபோது திருப்பூரில் பின்னலாடைத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏராளமான தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். ஆகவே அவர்கள் வேறு வேலை தேடி பிற ஊர்களுக்குச் சென்றுவிட்டனர் அல்லது சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர். இதனால், இப்போது 'ஆர்டர்'கள் குவிந்தாலும் வேலை செய்ய ஆட்கள் கிடைக்காமல் நிறுவனங்கள் தடுமாறுகின்றன.
நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க ஓரளவேனும் தங்களால் கைகொடுக்க முடியும் என்பதால் மனித
வளப் பற்றாக்குறையைப் போக்க மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு உதவவேண்டும் என்று அந்த நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.27,000 கோடி அந்நியச் செலாவணி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

