தமிழகத்தின் 11 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்திருக்கிறது. நீதிமன்றம் இந்த ஒத்திவைப்புக்கான தேதியைக் குறிப்பிடவில்லை. சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளந்தது. பின்னர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அதில் திரு பன்னீர்செல்வம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் இறுதியில் வெற்றி திரு பழனிசாமியின் தலைமையிலான அரசுக்குக் கிட்டியது.
இதனையடுத்து அரசுக்கு எதிராக வாக்களித்த 11 பேரையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி திமுகவும் அமமுகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆயினும், இந்த விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என்றும் சட்டமன்ற நாயகரின் உத்தரவே இறுதியானது என்றும் கூறி உயர் நீதிமன்றம், அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்தது. ஆனால் திமுகவும் அமமுகவும் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. வழக்கு பல நாட்கள் நிலுவையில் நிற்கையில் அதனை மீண்டும் விசாரிக்க வேண்டும் என திமுக கேட்டுக்கொண்டது. அதன்படி, இன்று வழக்கை விசாரித்த நீதிபதி தகுதி நீக்க வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்க உத்தரவிட்டுள்ளார்.

