சிவகங்கை: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.30 லட்சம் மோசடி செய்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த போலி போலிசை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (28). இவர் தான் காவல்துறை அதிகாரியாக இருப்பதாகவும், அர்மேனியா நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய புதுக்கோட்டை மாவட்டம் வடவாத்தியைச் சேர்ந்த பிரபு (29) என்பவர் முத்துக்குமாரிடம் பிப்ரவரியில் ரூ.2.30 லட்சம் கொடுத்துள்ளார்.
ஐந்து மாதங்களாகியும் வெளிநாட்டுக்கும் அனுப்பவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுகுறித்துப் பிரபு சிவகங்கை மாவட்ட எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபாலிடம் புகார் தெரிவித்தார். அவரது உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்தனர். இதில் முத்துக்குமார் போலி காவல்துறை அதிகாரி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து போலி அடையாள அட்டை, விசாக்களைப் பறிமுதல் செய்தனர்.

