வளைகுடாவில் சித்திரவதை: 2 பெண்கள் மீட்பு

வளைகுடாவில் சித்திரவதை: 2 பெண்கள் மீட்பு

2 mins read
975f5624-4e03-4ffa-b258-5acf00e71c1f
துபாயில் இருந்து மீட்கப்பட்ட பணிப்பெண் வீரம்மாள். படம்: ஊடகம் -

சென்னை: வீட்டில் சமையல் வேலை செய்வதற்காக துபாய் அழைத்துச் செல்லப்பட்ட இரு பெண்களை முகவர் ஒருவர் சித்திரவதை செய்தது அம்பலமாகியுள் ளது. இதையடுத்து இந்தியத் தூதகரம் மூலம் அப்பெண்கள் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 28 வயதான வீரம்மாளின் கணவருக்கு வேலையில்லை. இத்தம்பதியருக்கு 14 வயதில் மகள் உள்ளார். வறுமையில் இருந்து விடுபட வெளிநாடு செல்லத் தீர்மானித்தார் வீரம்மாள். இந்நிலையில் பெண் முகவர் ஒருவர் துபாயில் சமையல் வேலை வாங்கித் தருவதாகவும், கை நிறைய சம்பாதிக்கலாம் என்றும் ஆசையைத் தூண்டி விட்டுள்ளார். இதை நம்பி அப்பெண் முகவரிடம் துபாய் செல்வதற்குக் கணிசமான தொகையைக் கொடுத்துள்ளார் வீரம்மாள். இதையடுத்து அவர் சுற்றுலா விசா மூலம் துபாய் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தொடக்கத்தில் பல வீடுகளுக்கு அழைத்துச் சென்று சமையல் செய்வது, துணிகளை துவைப்பது, துப்புரவுப் பணிகள் என பலவற்றைச் செய்யுமாறு அந்த முகவர் கூற, அனைத்தையும் தட்டிக் கழிக்காமல் செய்து வந்­துள்ளார் வீரம்மாள். இதற்காக இந்திய மதிப்பில் அவருக்கு 17 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் துபாய் தவிர, சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட மேலும் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று கடுமையாக வேலை வாங்கி உள்ளார் அந்தப் பெண் முகவர். தினமும் அதிகாலை 3 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை வேலை பார்த்ததால் துவண்டுபோன வீரம்மாளின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தம்மால் இனியும் இவ்வாறு வேலை பார்க்க முடியாது என வீரம்மாள் கறாராக கூறவே, அந்தப் பெண் முகவர் அவரை அஜ்மான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அந்த வீட்டில் மேலும் பல பெண்கள் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவரது உதவியோடு அபுதாபிக்கு தப்பிச் சென்று அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார் வீரம்மாள். அவரது நிலை அறிந்து நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை தூதரக அதிகாரிகள் செய்தனர். நாடு திரும்பிய அவர் தன்னைப்போல் பாதிக்கப்பட் டுள்ள அனைத்துப் பெண்களை யும் மீட்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே வீரம்மாளைப் போன்று ஏமாற்றும் முகவர்களால் பாதிக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளான தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணும் மீட்கப்பட்டுள்ளார் என தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.