8ஆம் நூற்றாண்டு புலிக்குத்தி நடுகல் கண்டெடுப்பு

8ஆம் நூற்றாண்டு புலிக்குத்தி நடுகல் கண்டெடுப்பு

2 mins read

கோயம்புத்தூர்: கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் தமிழ்மறவான் ராமேசு, கிணத்துக்கடவு அருகேயுள்ள கப்பாளாங்கரை கிராமத்தில் களஆய்வு மேற்கொண்டார். அப்போது, துரைசாமி என்ற விவசாயிக்குச் சொந்தமான தோட்டத்தில், கிழக்கு திசையில், வீரன் ஒருவன் புலியை ஈட்டியால் குத்துவதுபோன்ற நடுகல் சிற்பம் கண்டறிந்துள்ளார். இதுகுறித்துக் கூறிய தமிழ் மறவான் ராமேசு, "இந்த நடுக்கல் உயரம் ஆறு அடி, ஐந்து அடி அகலம் கொண்டது.

"வீரன் ஒருவன், தனது கால்களை இரண்டு அடி அகல விரித்து, இடது காலை சற்று மடங்கிய நிலையில் முன்புறமும், வலது காலை பின்புறம் நிலத்தில் உறுதியாக ஊன்றிய நிலையில் நிற்கிறான். கோபத்துடன், நீள் ஈட்டியை, தன் மீது பாய வரும் ஆண் புலியின் தாடையில் குத்துவதைப்போல இந்த சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அந்த ஈட்டி, புலியின் கழுத்துப் பகுதியில் குரல்வளையைத் துளையிட்டு, சதையைப் பிய்த்துக்கொண்டு மூன்று அங்குலம் வெளியே நீண்டு காட்சியளிக்கிறது. வீரனின் வலப்புற இடையில் சிறு கத்தி, தலையின் பின்புறம் குடுமி உள்ளது. தலையின் முன் பகுதியில் சிறிய கொண்டை தலைப்பாகையும் உள்ளது. நடுகல் சிதைந்த நிலையில் உள்ளதால், இந்தப் புலிக்குத்தி நடுகல் கூறும் வரலாற்றைச் சரியாகக் கணிக்க இயலவில்லை.

"இது தொடர்பாக, தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் ஜெகதீசனிடம் ஆலோசித்தபோது, 'புலிக்குத்தி கல் சிலையின் தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது, 8 அல்லது 9ஆம் நூற்றாண்டுக்கு உட்பட்டதாக இருக்கலாம்," என்றார். போரில் இறந்த வீரர்கள், பசுக்களை மீட்டவர்கள், பத்தினிப் பெண்கள் ஆகியோர் நடுகல் எடுப்பதற்கு தகுதியுடையவர்களாக கருதப்பட்டனர். போரில் இறந்தவர்களுக்காக நடுகல் அமைக்கப்பட்ட செய்தியை அகநானூறு பாடலிலும், பசுவை மீட்டவர்களுக்கு நடுகல் அமைக்கப்பட்ட செய்தியை புறநானூறு பாடலிலும், பத்தினிப் பெண்களுக்கு நடுகல் அமைக்கப்பட்ட தகவலை சிலப்பதிகாரத்திலும் காணலாம்," என்றார் தமிழ் மறவான் ராமேசு.