கோயம்புத்தூர்: பொள்ளாச்சி சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி செரீப் காலனியை சேர்ந்தவர் அமானுல்லா (வயது 25). இவர் கிணத்துக்கடவு காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் பொள்ளாச்சிப் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் அமானுல்லா சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவில் ஈடுபட்டதோடு அவரது நண்பர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர்.
விசாரணையில் வெவ்வேறு காலகட்டத்தில் 10 பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த அமானுல்லா, பகவதி (26), முகமது அலி (28), டேவிட் செந்தில் (30), முகமது ரபீக் (28), அருண் நேரு (28), சையது முகமது (25), இர்ஷத் முகமது (28), இர்ஷத் பாஷா (28) ஆகிய 9 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

