கன்னியாகுமரி: திருப்பதிசாரம் பகுதியில் கொடுத்த கடனை திருப்பித் தராததால் அவரது வீட்டை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்ய முன்வந்தனர். இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத் திய தாசில்தாரின் மனிதாபிமான செயலைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்த மக்கள் பலரும் மனமுவந்து அவரைப் பாராட்டி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் கண்ணன், தொழில் முன்னேற்றத்திற்காக வங்கியில் கடந்த 2014ஆம் ஆண்டு 17 லட்ச ரூபாய் கடன் வாங்கினார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் கண்ணன் விபத்தில் சிக்கிக்கொண்டதால் கடன் தொகையைச் சரிவர செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது வீட்டை ஜப்தி செய்ய வங்கி அதிகாரிகள் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் வந்தனர்.
அப்போது வீட்டில் இருந்த கண்ணனின் மனைவியும் குழந்தைகளும் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றனர். இதனைப் பார்த்ததும் ஜப்தி நடவடிக்கையைக் கைவிடும்படி தாசில்தார் தடுத்து நிறுத்தியுள்ளார்.
ஜப்தி செய்யவிடும்படி வங்கி அதிகாரி ஒருவர் தாசில்தாரின் கையைப் பிடித்து இழுத்துள்ளார்.
மற்றொருவரோ தாசில்தாரின் காலில் விழுந்து அழுதுள்ளார்.
இந்நிலையில் "மக்கள் உயிரை எடுப்பதற்கு ஒருவருக்கும் உரிமை இல்லை. உயிர்களே முக்கியம்," என்று கூறி ஜப்தி நடவடிக்கையைத் தாசில்தார் கைவிடச் செய்தார்.

