'நீட்' மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு தமிழகத்திற்கு வந்ததற்குக் காரணம் திமுக என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அந்தத் தேர்வு குறித்த மக்களின் அதிருப்தியை திமுக தனது நிர்வாகத்தின்மீது திசைத்திருப்புவதாகத் திரு பழனிசாமி, நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசாங்கத்தை நிர்வகித்தபோது நீட் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளிவந்ததாகத் திரு பழனிசாமி சுட்டினார். முன்னையப் பிரதமர் மன்மோகன் சிங்கின் நிர்வாகத்தின்போதுதான் 2013ல் நீட் முதன்முறையாக நடத்தப்பட்டது என்று அவர் நினைவுபடுத்தினார். தற்போது அதன் மீது நிலவும் எதிர்ப்புப் போக்கை திமுக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாகத் திரு பழனிசாமி கூறினார்.

