நூறு ஆண்டுகளாக இருந்த ஓடை திடீர் மாயம்

நூறு ஆண்டுகளாக இருந்த ஓடை திடீர் மாயம்

1 mins read

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாட்சியாபுரம் முதல் கங்காகுளம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில் பெரியகுளம் கண்மாய்க்குச் செல்லும் ஓடை 100 ஆண்டுகளாக இருந்தது. காலப்போக்கில் ஓடையைப் பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டிவிட்டனர். சிலருக்கு ஓடை பகுதியிலேயே பட்டா வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஓடை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. இப்பகுதியில் மழை பெய்தால் தண்ணீர் ஓட வழியின்றி குடியிருப்புகளிலேயே தேங்கி நின்றுவிடுகிறது.

எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் மற்றும் போலிசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வியாழனன்று வந்து ஓடை இருந்த இடத்தை ஆய்வு செய்தனர். ஓடையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் பார்வையிட்டனர். அதிகாரிகளின் திடீர் ஆய்வால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.