தமிழின் தொன்மையை சிதைப்பதற்கு முயற்சி

தமிழின் தொன்மையை சிதைப்பதற்கு முயற்சி

2 mins read

சென்னை: ஆத்திகம் நாத்திகம் என்ற வேறுபாடின்றி தமிழ் மொழிக்கு தொண்டாற்றியவர்களை கவிஞர் வைரமுத்து தமது நூலில் பதிவு செய்திருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.

வைரமுத்து எழுதியுள்ள தமிழாற்றுப்படை என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசியபோதே ஸ்டாலின் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"தமிழின் தொன்மையை சிதைக்கும் முயற்சி மேற்கொள் ளப்பட்டிருக்கிறது. அதைத் தடுக் கும் போராட்டத்திற்கான ஆயுதமாக, தமிழாற்றுப்படை நூல் இருக் கிறது," என்றார் மு.க. ஸ்டாலின்.

இந்நிகழ்வில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழாற்றுப்படை நூல் நாகரிகத்தின் அடையாளம் எனக் குறிப்பிட்டார்.

"தமிழ், தமிழ் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் சிலர் தமிழில் பேசுவதும் எழுதுவதும் கிடையாது. இத்தகைய போக்கு தமிழ்மொழிக்கு அழிவை மட்டுமே தரும்," என்றார் ப.சிதம்பரம்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசுகையில், வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசும், கருவாச்சி காவியம் ஆகிய இருநூல்களும் 21ஆம் நூற்றாண்டின் இரட்டைக் காப்பியங்கள் எனப் புகழ்ந்தார். நோபல் பரிசு கவிஞர் வைரமுத்துவின் வீட்டுக் கதவை வந்து தட்டும் என்றும் வைகோ மேலும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே அனைத்து இடங்களிலும் தமிழுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை மத்திய அரசு கொடுத்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

எனவே இது குறித்து யாரும் வருத்தப்படத் தேவை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

"மொழி சார்ந்து யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. மொழி திணிப்பு என்பது நிச்சயம் கிடையாது," என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

இதற்கிடையே தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு கடும் அதிர்ச்சி அளித்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி, உயர் நீதிமன்றத்திலும் பசுமைத் தீர்ப்பாயத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு தன்னிச்சையாக இது போன்ற முடிவினை எடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.