பெரம்பலூர்: கஞ்சா கடத்தியவர்கள் சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களை கைது செய்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் காவல்துறையினர் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
ஆனால் காரின் ஓட்டுநர் நிறுத்தாமல் வேகமாகச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த போலிசார் அந்தக் காரை விரட்டிச் சென்றனர். அதில் இரண்டு பேர் இருப்பது தெரிய வந்தது. சினிமா காட்சியைப் போல் நிகழ்ந்த இந்தத் துரத்தலைக் கண்டு பொதுமக்களும் மிரண்டனர்.
இந்நிலையில் நிற்காமல் சென்ற காரின் சக்கரத்தில் போலிசார் சுட்டனர். இதனால் அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் வேறு வழியின்றி காரை நிறுத்திய அக்கும்பல், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
எனினும் போலிசார் அனைவரையும் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அவர்கள் வந்த காரில் சோதனையிட்ட போது, கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.
நிறைய சாக்குப் பைகளில் சிறு பொட்டலங்களாக 180 கிலோ கஞ்சாவை அக்கும்பல் கடத்த முயன்றதாக போலிசார் தெரிவித்தனர். மேலும் கஞ்சா பொட்டலங்களுக்கு மத்தியில் துப்பாக்கிகளும் இருந்ததாக போலிசார் குறிப்பிட்டனர். பிடிபட்டவர்களிடம் நடந்த விசாரணையில், அவர்கள் மதுரையைச் சேர்ந்த முனியசாமி, முருகன் என்பது தெரியவந்தது. இருவரும் எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்தனர், எங்கு கொண்டு சென்றனர் என்பது குறித்து விசாரணை நீடித்து வருகிறது. அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

