சென்னை: தமிழ்நாட்டை தளமாகக் கொண்டு பயங்கரவாத காரியங்களை அரங்கேற்ற சதித்திட்டம் போட்டதாக நம்பப்படும் ஒரு கும்பல் பிடிபட்டு இருக்கிறது.
தேசிய புலனாய்வு முகவை அதிகாரிகள் சனிக்கிழமை சென்னையிலும் நாகப்பட்டினத்திலும் பல இடங்களில் திடீர் சோதனைகளை நடத்தினார்கள்.
அந்தச் சோதனைகளின் விளைவாக நாகப்பட்டினத்தில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சென்னைக்குக் கொண்டு சென்றனர்.
தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஒரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்தியாவை இஸ்லாமிய ஆட்சி நாடாக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆயத்தமாகி வந்ததாகவும் பணம் திரட்டியதாகவும் தெரியவந்தது.
சென்னையில் சையது முகம்மது புகாரி என்பவரின் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனைகள் நடந்தன. நாகப்பட்டினத்தில் ஹசன் அலி யூனுஸ் மரைக்காயர், ஹாரிஸ் முகம்மது என்பவர்களின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
தடை செய்யப்பட்ட 'அன்சருல்லா' என்ற பயங்கரவாத இயக்கத்தை தமிழ்நாட்டில் உருவாக்க திட்டம் போடப்படுகிறது என்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இச்சோதனைகள் நடந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இந்தச் சோதனையில் 9 கைபேசிகள், கணினித் தகவல் சேமிப்புச் சாதனங்கள், பயங்கரவாதத்தைத் தூண்டும் வகையிலான சுவரொட்டிகள், கையேடுகள், புத்தகங்கள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சோதனைகளின் தொடர்பில் இந்த மூவரும் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நபர்கள் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த ஆயத்தமாகி வந்ததாகவும் பணம் திரட்டி இருப்பதாகவும் தெரியவந்து இருக்கிறது என்று புலனாய்வு முகவை குறிப்பிட்டு இருக்கிறது.
இந்த மூவர் மீதும் பல்வேறு பிரிவுகளின்கீழ் குற்றம் சுமத்தப்படும் என்றும் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

