வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவாக திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் களத்தில் குதிக்கிறார் என்று ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
வேட்பாளர் ஏசி சண்முகமும்
ரஜினியும் 35 ஆண்டுகால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபடும்படி வேலூர், திருவள்ளூர் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. வேலூர் தேர்தல் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடக்கிறது. திமுக சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவருமே பண பலத்தில் சமபலம் உள்ளவர்கள் என்பதால் இருவரும் இரண்டில் ஒன்று பார்த்துவிட முடிவு செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் தாங்கள் மேலிடத்தின் உத்தரவை ஏற்று ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக களத்தில் குதிப்பதாகக் கூறுகிறார்கள்.
இதனிடையே, வேலூரில் தேர்தலின்போது பெரும் பணம் பாயும் என்பதால் அங்கு தேர்தல் ஆணையம் கூடுதலாக 72 கண்காணிப்புப் படைகளை அமைத்து இருக்கிறது.
இப்போது அங்கு ஒரு பகுதிக்கு ஒரு பறக்கும் படையும் ஒரு நிலை கண்காணிப்புக் குழுவும் என்ற கணக்கில் 36 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்றும் கூடுதலாக 72 படைகள் அமைக்கப்படும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மொத்தம் 108 குழுக்கள் பணியில் இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
வேலூரில் திமுக பிரமுகர் வசூர் நடராஜன் என்பவரின் தம்பியான ஏழுமலை என்பவரின் வீட்டில் ரூ. 27 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றிய வேளையில் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இதனிடையே, திமுக தலைவர் ஸ்டாலின், வேலூர் தொகுதியில் அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றியை அபகரிக்க சூழ்ச்சி நடப்பதாகத் தெரிவித்துள்ளார்.

