குஷ்பு அரசியலுக்கு முழுக்கு

குஷ்பு அரசியலுக்கு முழுக்கு

1 mins read

சென்னை: காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து வரும் நடிகை குஷ்பு (படம்), தீவிர அரசியலில் இருந்து விலகி மறுபடியும் திரைத்துறைக்குத் திரும்ப விரும்புவதாக டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து காங்கிரஸ் கட்சியின் பெரும் பெரும் தலைவர்கள் பலரும் பதவியில் இருந்து விலகி வருகிறார்கள். இந்நிலையில் நடிகை குஷ்பு அரசியலில் இருந்தே விலகுவதாக எடுத்து இருக்கும் முடிவை அவருடைய ரசிகர்கள் பலரும் ஆதரித்து வருகிறார்கள்.

தான் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு மீண்டும் திரைப் படத்திற்குத் திரும்ப விரும்புவதாகவும் இதன் தொடர்பில் ரசிகர்கள் தங்கள் எண்ணங்களை, யோசனைகளை, கருத்துகளைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நடிகை குஷ்பு சமூக ஊடகத்தில் அண்மையில் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

நடிகை குஷ்பு முதலில் திமுகவில் சேர்ந்தார். பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பும் அவருக்குக் கிடைத்தது. காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த நடிகை நக்மாவுக்கும் குஷ்புவுக்கும் இடையில் மோதல் வெடித்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட குஷ்புவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. இந்தச் சூழலில் அரசியலுக்கே ஒட்டுமொத்தமாக முழுக்குப்போட்டுவிட குஷ்பு முன்வந்திருப்பதை அவருடைய ரசிகர்கள் ஆதரித்து கருத்து கூறி வருகிறார்கள்.